பாரதத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக ‘அக்னிபத்’ என்ற புரட்சிகர திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் நல்ல பணப் பலன்களுடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சொந்தத் தொழில் துவங்க உதவி, அசாம் ரைப்பிள்ஸ் உள்ளிட்ட படைகளில் சேர முன்னுரிமைகள் மற்றும் சலுகைகள், பொது மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் சேர உதவி என பல உதவிகள் வழங்கப்பட உள்ளன. பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த காத்திருக்கின்றன. இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க ரயில்வே நிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது. அவ்வகையில், லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும். முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகளும், அதற்கடுத்த பேட்ச் அக்னிவீரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வும் அளிக்கப்படும். மேலும், உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.