ரயில்டெல் சாதனை

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வைஃபை இணையதள வசதி ஏற்படுத்தித் தருவதை குறிக்கோளாகக் கொண்டு, கடந்த 2016ல் மும்பை சென்ட்ரல் நிலையத்தில் தொடங்கப்பட்டது ரயில்டெல் இணைய வைஃபை சேவை. கடந்த 64 மாதங்களில் ரயில்டெல், நாடு முழுவதும் 6,000 நிலையங்களில் வைஃபை இணைய சேவையை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் காரணமாக 2020ல் சில மாதங்களுக்கு இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும் ஒரு நாளைக்கு, சராசரியாக, 3 நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ஹசாரிபாக் ரயில் நிலையம், இந்த வைஃபை வசதி பெற்ற நாட்டின் 6,000வது நிலையம். தற்போது 30 நிமிட இலவச பயன்பாட்டை பயனாளர்களுக்கு வழங்கும் ரயில்டெல்லின் இந்த சேவை, விரைவில் பல்வேறு பிரீபெய்ட் திட்டங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த 2020 நிதியாண்டில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 30.01 மில்லியன் பயனர் உள்நுழைவுகளையும், சராசரியாக 9,262 டெராபைட் மொத்தத் தரவு நுகர்வுகளும் ரயில்டெல் மூலம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் ஒரு போர்ட்டர், கேரள சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க ரயில் நிலைய வைஃபை வசதியை பயன்படுத்தியுள்ளார். மும்பையில் புற்றுநோய் நோயாளிகள் தினமும் இவ்வசதியை பயன்படுத்துகிறார்கள், இந்த வைஃபையை பயன்படுத்தி பாடங்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பல மாணவர்கள் படிக்கின்றனர். ரயில் நிலைய விற்பனையாளர்கள் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளுக்கு இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள். ரயிலில் பயணம் செய்வோர், காத்திருப்போருக்கு மட்டுமல்ல, இந்த ரயில்டெல் இதுபோல பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.