ராகுலின் மேதாவித்தனம்

மத்திய அரசு  சுமார் 960 கோடியில் புதிதாக கட்ட உள்ள நாடாளுமன்ற கட்டடம் ஒரு ‘கிரிமினல் வேஸ்ட்’ என டிவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் மகாராஷ்டிர அரசு சுமார் 900 கோடியில், நாரிமன் பாயிண்டில் எம்.எல்.ஏ.க்களுக்கான ஆடம்பர குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

400 கோடி என முன்னர் மதிப்பிடப்பட்ட இந்த திட்டம் கால தாமதம், கூடுதல் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது 900 கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த ஆடம்பர எம்.எல்.ஏ ஹாஸ்டலில், மொட்டை மாடி உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், மாநாட்டு அரங்குகள், எம்.எல்.ஏ பார்வையாளர்களுக்கான தனி காத்திருப்பு அறைகள், கேண்டீன், ஷாப்பிங் காம்பிளக்ஸ், தியேட்டர் போன்ற பல ஆடம்பர வசதிகள் உள்ளன. பழைய எம்.எல்.ஏ விடுதி கட்டடங்கள் கடந்த 2018 இல் இடிக்கப்பட்டன. இதனால் தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏ தங்குவதற்கும் மகாராஷ்டிர அரசு, ஒரு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் செலவழித்து வருகிறது.

கொரோனா காரணமாக மகாராஷ்டிர அரசு மிகக்கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இந்த வீண் செலவு அவசியமா என தன் கூட்டணி கட்சியான சிவசேனாவை கேட்க முடியாத ராகுல், நமது தேசத்தின் தலைநகரில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களை அரசியலாக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

2026ல் உயர உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை, வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தற்போதுள்ள 94 வருட பழைய கட்டடத்தில், செயல்படுத்த முடியாது. இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போது மிக மிக அத்தியாவசியமானது. 2012ல் புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவை என்பதை காங்கிரஸ் கட்சியின் அன்றைய சபாநாயகர் மீரா குமார் முன் மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வருவதற்கு முன்பே புதிய நாடாளுமன்றத்திற்கு திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது என்பதை எல்லாம் யோசிக்காமல் கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டே கல் எரியும் வகையில் பேசி வருகிறார் ராகுல்.

மதிமுகன்