ராகுலின் நிதி நிராகரிப்பு

கேரளாவில் உள்ள ஒரு நகராட்சி நிர்வாகம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நிதியை நிராகரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் நகராட்சி புதிய சமூக சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்காக ராகுல் வழங்கிய ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியை நிராகரித்தது. சமூக சுகாதார மைய மாஸ்டர் பிளான் திட்ட தயாரிப்பு நடந்து வருவதால், ஒதுக்கப்பட்ட நிதியை திட்டத்திற்காக செலவிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகம், செலவினம் தொடர்பான நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி முக்கம் நகராட்சி செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி ஒதுக்கீட்டை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் எழுதிய கடிதத்தில், ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுத்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தையடுத்து, நகராட்சியின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.