கர்நாடக மாநிலம் மைசூருவில் ‘திங்கர்ஸ் ஃபாரம்’ என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அதில், மத்திய அரசு சீனாவுடனான உறவைக் கையாள்வது குறித்த காங்கிரஸ் தலைவரின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வயநாடுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியை விமர்சித்தார். அப்போது, “ராகுல் காந்தியிடமிருந்து சீனாவைப் பற்றி வகுப்புகள் எடுத்துக்கொள்ள நான் முன்வந்திருப்பேன், ஆனால் அவர் சீனத் தூதரிடம் இருந்து சீனாவைப் பற்றி வகுப்புகள் எடுத்துக்கொள்வதை நான் கண்டுபிடித்தேன்,” என்று கூறினார். மேலும், “அரசியலில் எல்லாமே அரசியல் என்று எனக்குத் தெரியும். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சில விஷயங்களில், வெளிநாட்டில் நமது தேசத்தின் கூட்டு நிலைப்பாட்டை பலவீனப்படுத்தாத வகையில் நடந்துகொள்ளும் கூட்டுப் பொறுப்பு நமக்கு இருக்கிறது. பெரும்பாலும் மிகவும் தவறாக வழிநடத்தும் கதைகள் புனையப்படுகின்றன” என கூறினார். ராகுல் காந்தியின் கருத்துக்களை கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், ராகுல் சீனாவைப் புகழ்ந்து பேசும் போது பாரதத்தை நிராகரிப்பதற்காக விமர்சித்த அவர், இதை பார்க்கும்போது ஒரு பாரதக் குடிமகனாக நான் கவலைப்படுகிறேன். ராகுல் காந்தி, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (பி.ஆர்.ஐ) பாராட்டி பேசுகிறார். பி.ஆர்.ஐ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. இது நமது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுகிறது. ஆனால், அதைப் பற்றிச் சொல்ல அவரிடம் வார்த்தை இல்லை” என்று ஜெய்சங்கர் வருத்தத்துடன் கூறினார். 2017ல் டோக்லாம் ராணுவ நெருக்கடியின் போதும் பூடான் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் போதும், 1962 போர் மீண்டும் நிகழும் என்று சீனா அச்சுறுத்தியது. அப்போது, நட்பு நாடான பூடானுக்கு ஆதரவாக பாரதம் நின்றது. ஆனால்,அப்போது ராகுல் காந்தி சிறிதும் தேசப்பற்று இன்றி சீனத் தூதரை சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.