நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘மோடி’ என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசி பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கினார். இதனையடுத்து பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தை சேர்ந்த சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கியது. இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். ராகுல் காந்தியின் இந்த தகுதிநீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை நடத்தியது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்பட்ட தனது சொந்தத் தொகுதியான அமேதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைவதில் இருந்து தப்பிக்க, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல் காந்தி என்பது நினைவு கூரத்தக்கது.