பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் 75வது சுதந்திர தின உரையின்போது,பொருளாதார உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதிசக்தி திட்டம்’ செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று கதி சக்தி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாங்கள் அடித்தளம் அமைக்கிறோம். இந்த தேசிய மாஸ்டர் பிளான் 21ம் நூற்றாண்டில் பாரதத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். மேலும், இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் முன்னுரிமையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இது அவர்களின் அறிக்கையின் ஒரு பகுதியாகக்கூட இருந்ததில்லை. தரமான உள்கட்டமைப்பு என்பது நிலையான வளர்ச்சிக்கான வழி. இது பொருளாதாரத்தை பெருக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இத்திட்டம் 16 மத்திய அமைச்சகங்கள், துறைகளால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு முயற்சிகளை ஒன்றிணைக்க ஒரு மையப்படுத்தப்பட்ட போர்ட்டலை வழங்குகிறது. இத்திட்டம் சுயசார்பு பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையின் ஒரு முக்கிய பகுதி. இத்திட்டம், நமது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான முயற்சியை நோக்கமாக கொண்டுள்ளது. கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளானின் ஆறு தூண்களாக விரிவான தன்மை, முன்னுரிமை, தேர்வுமுறை, ஒத்திசைவு, பகுப்பாய்வு, டைனமிக் ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.