மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் மமதா பானர்ஜியை பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற திருணமூல் கட்சி சார்பாக மமதா முதல்வரானார். இதனை அடுத்து 6 மாதங்களுக்குள் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டிய கட்டாயத்தில் மமதா உள்ளார். அங்கு கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்த தேர்தல் ஆணையம், திடீரென அங்கு செப்டம்பர் 30ல் இடைத்தேர்தலை அறிவித்தது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், ‘புதிய அரசை அமைக்க தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. நியாயமான தேர்தலை நடத்துவது அவர்களின் பொறுப்பு. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரை முதல்வராக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு அல்ல. தமிழகம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படவில்லை, இரண்டரை ஆண்டுகளாக, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. ஆனால் இங்கு இப்போது மட்டும் இடைத்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அங்குள்ள மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை இல்லையா? மமதா பானர்ஜியை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துக்கொண்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.