திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துக்கொண்டார். பின், பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, ‘அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், காலை, 10:00 மணிக்கு மேல், பலரும் சாலையில் கூட்டமாக செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நாசர், ‘நிருபர்களே வீட்டில் இருக்காமல், பேட்டியெடுக்க இங்கு வந்துள்ளீர்கள். இதே போல், அவர்களும் ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளியில் வந்திருப்பார்கள்’ என அலட்சியமாக பதில் கூறினார். ‘ஊடகத் துறையினர் அத்தியாவசிய பணியாளர்கள். அவர்களை முன்களப் பணியாளர்கள் என்று தமிழக அரசே அறிவித்திருக்கிறது. இதனை அறியாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ஒரு சில பொதுமக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரே வக்காலத்து வாங்குகிறாரே. இப்படி இருந்தால் கொரோனா பரவலை எப்படித் தடுக்க முடியும்?’ என அங்கிருந்த பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் வியந்தனர்.