தகுதி வாய்ந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மாற்றாக, காற்றை உள்வாங்கி அதை ஏறக்குறைய மருத்துவ ஆக்சிஜன் தரத்துக்கு சுத்தப்படுத்தி தரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. பல மருத்துவமனைகள், வீடுகளில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த செறிவூட்டிகளில் பல வகைகள் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் பயன்படுத்தத்தக்க தகுதிவாய்ந்த செறிவூட்டிகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ‘ஆக்சிஜன் செறிவூட்டிகளில், நிமிடத்துக்கு 1 முதல் 10 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டி தொடர்ச்சியாக வழங்க கூடிய திறன் படைத்த இயந்திரங்கள் சந்தையில் உள்ளன. என்றாலும், தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா நோயாளிகள், குறைந்தபட்சம் நிமிடத்துக்கு 5 லிட்டர் அல்லது அதற்கு மேல் ஆக்சிஜனை செறிவூட்டி வழங்கும் இயந்திரங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மற்றவை பலனை தராது. காற்றை 90 சதவீதத்திற்கும் அதிகமாக செறிவூட்டக்கூடியதாக இயந்திரம் இருக்க வேண்டும். செறிவூட்டும் தன்மையை கண்காணிக்கவும், இயந்திரம் செயல்படும் நேரத்தை தெரிவிக்கவும் ‘டிஜிட்டல்’ திரையுடன் கூடியதாக இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றை பார்த்து வாங்கி பயன்படுத்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும், விற்பனை செய்யப்படும் செறிவூட்டிகளில், அவை நிமிடத்துக்கு எத்தனை லிட்டர் ஆக்சிஜன் வெளிபடுத்தும் திறன் கொண்டது, எத்தனை சதவீதம் சுத்தமான ஆக்சிஜனை வழங்கும், அதிகபட்ச சில்லரை விலை ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடப்படப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.