சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர், “சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அறநிலையத் துறையினர் காழ்ப்புணர்சியோடும், உள்நோக்கத்தோடும் செயல்படுகின்றனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2005 முதல் 2022 வரை உள்ள நகைகள் சரிபார்ப்பு பணி ஐந்து நாட்களுக்கு முன் முடிந்தது. ஆனால், இது குறித்து எவ்விதமான சான்றும் கோயில் நிர்வாகத்திடம் அவர்கள் வழங்கவில்லை. அதிகார வரம்புக்கு உட்பட்டு அவர்கள் வரவில்லை. எனினும், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தோம். மேலும் 1956ம் ஆண்டில் இருந்து 2005 வரை உள்ள நகைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என கூறினர். இது, அறநிலையத்துறையின் உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ஏற்கனவே உள்ள நகைகள் சரிபார்ப்பு முடிந்த பிறகு மீண்டும் சரிபார்ப்பு என்பது தேவையற்றது என்பதால் அதை நாங்கள் ஏற்கவில்லை. மேலும் 2022 வரை உள்ள நகைகளை ‘சீல்’ வைக்க வேண்டும் என அவர்கள் கூறினர். ஆனால் இந்த கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. இனிவரும் காலங்களில் நடராஜர் கோயில் நகைகளை, தனி ஆடிட்டர் வைத்து, ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில், தீட்சிதர்கள் அடங்கிய குழுவினரோடு நாங்களே தணிக்கை செய்து, மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையாக அறிவிப்போம். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், 15 லட்சத்திற்கு மேலான தணிக்கை குழு அறிக்கைகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நடராஜர் கோயில் விவகாரத்தில் மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு, தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மட்டுமே அவர்கள் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதைத்தவிர, நடராஜர் கோயிலில், தீட்சிதர்கள் பால்ய விவாகம் செய்தால் தான் கோயில் நிர்வாகம் பூஜை முறைக்கு அனுமதி அளிக்கும் என தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. அது முற்றிலும் தவறு. திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் கூட, 25 வயதிற்கு மேல் முறையான வேதம் படித்து, ஆகம விதிகளோடு பயிற்சி முடித்து, சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்த பின்னர் தான் பூஜைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பால்ய விவாக புகாரில் தீட்சிதர்களை காவல்துறையினர் கைது செய்த விதம், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது. ஏதோ ரவுடிகளை கைது செய்வது போல் கைது செய்துள்ளனர்” என தெரிவித்தார்.