ம.பி., சென்ற பிரதமர் மோடி 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். பிறகு, பா.ஜ.,வின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மோடி பேசினார். அப்போது மோடி பேசியதாவது: இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்களை பெற்ற ம.பி., மாநிலத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போபால் முதல் ஜபல்பூர் வரையிலான பயண நேரம் இனி குறையும். வந்தே பாரத் ரயில் மூலம் மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படும். பா.ஜ.,வை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றியதில் ம.பி., மாநிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொண்டர்கள் தான், பா.ஜ.,வின் பெரிய பலமாக உள்ளனர். நாம் ஏசி அறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பவர்கள் அல்ல. மோசமான வானிலையிலும் மக்களுடன் இணைந்து பாடுபடுபவர்களாக உள்ளனர்.
நான் அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற போது, உங்களின் கடின உழைப்பு குறித்து என்னிடம் கூறினர். தற்போது, உங்களை வந்து சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. காங்கிரஸ், திரிணமுல், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் ஊழலில் மூழ்கி உள்ளன. 7-0 ஆயிரம் கோடி மதிப்பு ஊழல் காரணமாக என்சிபி உள்ளது. ஒவ்வொரு ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கிறேன். ஊழல்வாதிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்ப எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால், உறுதியாக ஊழல்வாதிகள் தண்டனை பெறுவார்கள்.
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து, முஸ்லீம் பெண்களுக்கு எதிர்க்கட்சியினர் அநீதி இழைக்கின்றனர். மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்த விரும்புகின்றன. பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் சிந்திக்க துவங்கிவிட்டனர். சம உரிமை குறித்து அரசியல்சாசனம் பேசுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து இதனை எதிர்க்கின்றனர்.
எதிர்க்கட்சிகளை வெறுக்கவில்லை. அவர்கள் மீது அனுதாபம் தான் ஏற்படுகிறது. பயம் காரணமாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றன. 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்றுவிடும் என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. இதனால், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு மோடி பேசினார்.