புதுவை சிறக்கும்

புதுச்சேரியில் 75-வது சுதந்திர தினத் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘ஆடிப்பெருக்கில் மரம் நடுவிழா நடக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி மரம் நட்டுள்ளோம். காலியிடங்களில் மரம் நடுவதுடன், அரசு காலிப் பணியிடங்களையும் நிரப்புவோம். புதுச்சேரியை முன்பைப்போல பசுமையாக்க வேண்டும்’ என்றார். இந்நிகழ்வில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ‘இன்னும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பசுமையான புதுச்சேரியை உருவாக்குவோம். சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்பிடித் துறைமுகம் திட்டத்தை செயல்படுத்துவோம். தனியார் தொழிற்சாலைகள் வர நல்ல சூழலை அரசு உருவாக்கும். ஆளுநர் ஒத்துழைப்புடன் புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக்குவோம்’ என்று குறிப்பிட்டார்.