ஈஷா யோகா மையத்துக்கு எதிராக பொய்ப் பிரச்சாரத்தை பரப்பும் சதிகார கும்பலுக்கு எதிராக உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடியினர் இணைந்து போராட்டம் நடத்தினர். ஈஷா யோகா மையத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அவதூறு செய்யும் சுயநலவாதிகளுக்கு எதிராக ஆலாந்துறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தின் உதவியால் தாங்கள் உடல்நலம், வாழ்வாதாரம், கல்வி மற்றும் சமூக நல்வாழ்வின் பயனாளிகளாக இருப்பதாகவும், இத்தகையவர்கள் பரப்பும் பொய்யான கதைகளால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கிராம மக்கள், பழங்குடியினர் என பலதரப்பு மக்களும் ஈஷாவால் தங்கள் கிராமங்கள் பெற்றுவரும் நன்மைகளை எடுத்துரைத்த அவர்கள், அதனைத் தடுக்க சதிகாரர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்டு விரிவாக எடுத்துரைத்தனர். சில போலி அமைப்புகள் பணத்திற்காகவும், தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றன. இங்குள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் ஈஷாவை நம்பியே உள்ளனர். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் எங்களுக்கு எது உண்மை எது பொய் எது என்று தெரியாதா? குறிப்பிட்ட சிலர் வெளியில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து ஈஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி எங்கள் கிராமத்தில் அமைதியை குலைக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பழங்குடியின மக்களின் பெயர்களை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து போராட்டம் நடத்த காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது. அவர்கள் இன்னும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்தால், உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து அவர்களின் பொய் அறிக்கைகள் மற்றும் சதிகளை அம்பலப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.