இமாம் தலைவருக்கு பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கடந்த செப்டம்பர் 22ம் தேதி அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது மோகன் பாகவத்தை ‘ராஷ்டிர பிதா’ (தேசத்தின் தந்தை), ‘ராஷ்டிர-ரிஷி’ (தேசத்தின் ரிஷி) என்று உமர் அகமது இலியாசி அன்புடன் குறிப்பிட்டார். ‘நமது தேசத்தின் தந்தை ஒருவரே’ என கூறி இதனை மோகன் பாகவத் அன்புடன் மறுத்தார். இந்நிலையில், இலியாசிக்கு முஸ்லிம்கள் சமூகத்திடம் இருந்தே பல கொலை மிரட்டல்கள் வந்தன. பாரதம் மட்டுமில்லாது, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. காவல் நிலையத்தில் இதுகுறித்து இலியாசி வழக்குப் பதிவு செய்ததுடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதனை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், தற்போது அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இலியாசி “உள்துறை அமைச்சகம் வழங்கிய ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பிற்காக நான் மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். இந்த மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை. நான் கூறிய கருத்துகளில் நான் இன்னும் உறுதியாக நிற்கிறேன்” என்று கூறினார்.