மதம் மாற்றும் மாமியார்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஊமைப் பெண்ணான விமலா தேவி, கடந்த ஜூலை 4, 2019 அன்று சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சங்கர் அவருடன் 15 நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றார். அவர் சென்ற பிறகு, விமலாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அவரது மாமியார் கொடுமை செய்தார். விமலா மறுக்கவே, அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார் அந்த மாமியார். அதன் பிறகு விமலா தனது தாயுடன் வசித்து வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமலாவின் தாய் தமிழரசி, ‘என் மகள் என்னுடன் தங்கியிருந்த இந்த 3 வருடங்களில் ஒரு முறை கூட சங்கர் அவளை அழைத்து பேசவில்லை. நாங்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும் எங்கள் அழைப்புகளை எடுக்கவில்லை. இதுகுறித்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார். இதனையடுத்து விமலாதேவி, தனது உறவினர்களுடன்  நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.