பாரதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, நாட்டில் பல நூற்றாண்டு கால காலனித்துவ சுரண்டலின் போது ஆங்கிலேயர்களால் பாரதத்தில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரம் மற்றும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பிரச்சாரத்தைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜதந்திர பிரச்சாரம் ‘கடந்த காலத்தை கணக்கிடுதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து எதிர்கொள்ளும் மிகப்பெரிய மீள்குடியேற்ற உரிமைகோரலாக அமையும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “இது அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் தொல்பொருட்களை திரும்பப் பெறுவதற்கான பாரதத்தின் இந்த முயற்சியின் உந்துதல் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட அர்ப்பணிப்பிலிருந்து வருகிறது, அவர் அதை ஒரு முக்கிய முன்னுரிமையாக ஆக்கியுள்ளார்” என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகனை மேற்கோள் காட்டி ‘தி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, மத்திய அரசின் வெளியுறவுத்துறை, தூதரக அதிகாரிகள் மூலமாக, லண்டனில் உள்ள அரச குடும்பத்தால் பாரதத்தில் காலனித்துவ ஆட்சியின் போது நியாயமற்ற முறையில் எடுத்டுச் செல்லப்பட்ட கலைப்பொருட்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு முறையான கோரிக்கைகளை வைக்கப்படும். இந்த செயல்முறை இந்த ஆண்டு தொடங்கப்படும். மேலும், சமீபத்தில் முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் தற்போது வைத்திருக்கும் மகுட நகைகளில் ஒன்றான கோஹினூர் வைரத்தை மீட்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. கோஹினூர் பாரதத்திடம் இருந்து பிரிட்டனுக்குக் கிடைத்த பரிசு அல்ல. மகாராஜா துலீப் சிங் என்ற 10 வயது சிறுவனிடம் இருந்து பலவந்தமாக கவரப்பட்ட கோஹினூரை, பிரிட்டிஷ் அரச குடும்பம் 1849ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்துள்ளது. பாரத துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ வெற்றியின் அடையாளமாக கோஹினூர் பரவலாகக் கருதப்பட்டாலும், அது இங்கிருந்து ஆங்கிலேயர்களால் திருடிச் செல்லப்பட்ட மொத்த செல்வம் என்ற மிகப்பெரிய பனிப்பாறையின் ஒரு மிகச்சிறிய முனை மட்டுமே. பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக்கின் 2018 ஆராய்ச்சியின்படி, பண மதிப்பின் அடிப்படையில், பிரிட்டன் 1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் பாரதத்தில் இருந்து கிட்டத்தட்ட 45 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள செல்வத்தை இங்கிலாந்து கொள்ளையடித்துள்ளது.