பாரதத்தில் உள்ள பொதுப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று கட்டாய மதமாற்றம். இதற்கெதிராக சில மாநிலங்கள் சட்டமியற்றியுள்ளன. கர்நாடக மாநிலத்திலும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி செய்யப்பட்டது. இதற்கு வழக்கம்போல, கிறிஸ்துவ முஸ்லிம் அமைப்புகளும், காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா டிசம்பர் 2021ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்ட மேலவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் இம்மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது மதமாற்றத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், கர்நாடக அரசு அவசரச் சட்டத்தை வெளியிட்டது. இதற்கு அமைச்சரவையும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையும் ஒப்புதல் அளித்தனர். இந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்தவொரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவதில்லை. மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.