மதமாற்றத் தடை சட்டம் தேவை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியலுார் மாவட்டம், வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயியின் மகள் லாவண்யா. இவர் துாய இருதய மேல்நிலை பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி படித்துள்ளார். நன்றாக படிக்கும் இவரை பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சிஸ்டர் சகாயமேரி, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியின் பெற்றோரின் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும், பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காததால், மாணவியை படிக்க விடாது, விடுதி வேலைகளை செய்யுமாறு தொல்லை கொடுத்து உள்ளார். மனம் உடைந்த மாணவி லாவண்யா, பள்ளியில் விஷத்தை அருந்தியுள்ளார். உடல்நலம் கெட்டதால் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். சிகிச்சை பலன் அளிக்காமல், மாணவி மரணம் அடைந்தார். மாணவி மரணத்திற்கு முன் பேசிய, வீடியோ பதிவு மனதை பதற வைக்கும். வீடியோவில் சகாயமேரியும், பள்ளி நிர்வாகத்தினரும் மத மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதை உறுதி செய்துள்ளார். ஆனால், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை இதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலையும் அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.