முற்போக்குடைய தேசிய கல்விக் கொள்கை

உத்தரப் பிரதேச மாநிலம் தாக்கூர்துவாரில் உள்ள கிருஷ்ண மஹாவித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “கல்வியிலிருந்து பட்டம் என்பதைப் பிரித்து வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டது தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி 2020). பாரதத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வாய்ப்புகளை வழங்குவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற புத்தொழில் நடைமுறைக்கும் என்.இ.பி 2020 உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, உலகளாவிய குறியீட்டிற்கேற்ப பாரதத்தின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்கும். சுதந்திரத்திற்குப் பின் பாரதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கல்வி சீர்திருத்தம் இது.

புதியக் கொள்கை முற்போக்கானதும் தொலைநோக்கு பார்வைகொண்டதும் மட்டுமின்றி 21ம் நூற்றாண்டில் உருவாகி வரும் தேவைகளையும் மனதில் கெண்டது. இது பட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கிறது. கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை, பல நிலையில் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் மாணவர்களுக்குக் கல்வியில் நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது. மாணவர்களின் கற்றல் மற்றும் உள்ளார்ந்த அணுகுமுறையைச் சார்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் பலவிதமான வேலைவாய்ப்புகளைக் கிடைக்கச் செய்து ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அண்மைக்கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் இருக்கின்றன. புதிய தொழில்கள் தொடங்குவதற்கு அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று உறுதியளித்தார்.