தற்போதைய தி.மு.க அரசில், மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த 2011 – 2016 காலகட்டத்தில், அ.தி.மு.க அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 81 நபர்களிடம் ரூ. 1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உட்பட நான்குபேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு, எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் மீது, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில், குற்றப் பத்திரிகை வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருவதால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி. ஜூலை 15- தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.