டெல்லி கலால் கொள்கை மதுபான ஊழல் வழக்கில், டெல்லி மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) நீதிமன்றத்தில் ஆஜரான தொழிலதிபர் தினேஷ் அரோரா இவ்வழக்கில் மன்னிப்பு கோரியதுடன் அப்ரூவர் ஆவதற்கும் விண்ணப்பம் செய்துள்ளார். மேலும், “இந்த குற்ற வழக்குகளில் நான் ஈடுபட்டது குறித்து தானாக முன்வந்து வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு முன்பு நான் ஒத்துழைத்துள்ளேன். இதில், சி.பி.ஐ அல்லது வேறு எந்த நபரிடம் இருந்தும்எனக்கு அழுத்தமும் அளிக்கப்படவில்லை” என கூறினார். இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே ஆகியோர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள், மதுபான உரிமதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை நிர்வகித்தல், கைமாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்று சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள்து. இவ்வழக்கில், டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.