டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, டெல்லியில் கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கான மதுபான விற்பனை உரிமம் வழங்கும் கொள்கையில், மாற்றம் செய்து விற்பனை செய்யும் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் கடந்த ஆகஸ்ட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இவ்வழக்கில் தற்போது மணீஷ் சிசோடியாவிற்கு மிகவும் நெருக்கமானவரும், மது தயாரிப்பு ஆலை ஒன்றின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான விஜய் நாயர் என்பவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இது இவ்வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.