ஷீரடிக்கு தனியார் ரயில்

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோயிலுக்கு பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷீரடிக்கு கோவை உட்பட ஐந்து நகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ், ரயில்வே துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து, கோவையிலிருந்து ஷீரடிக்கும், ஷீரடியிலிருந்து கோவைக்கும் தனியார் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. ராகவேந்திரரின் புனிதத் தலமான மந்திராலயம் வழியாக ரயில் செல்வதால் ஷீரடி செல்லும் பக்தர்கள் இந்த இரண்டு கோயில்களுக்கும் சென்றுவர முடியும். முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் இந்த ரயிலில், துாய்மையாக, சர்வதேச தரத்திலான விருந்தோம்பலுடனும் சேவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரயில், வரும் 14ம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளது. ரயிலுக்கான டிக்கெட் விற்பனையும் துவங்கியுள்ளது.