உலகளவில் விண்வெளித்துறை பெரிதாக வளர்ச்சி அடைந்து வருகிறது, விண்வெளி பயணம், ராக்கெட் தயாரிப்பு போன்ற துறைகளில் அரசு நிறுவனங்களைத் தாண்டி தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. இன்று தொலைத்தொடர்பு சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்நிறுவனங்களுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. அப்படி பாரதத்தில் உருவான ஒரு நிறுவனம் தான் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’. இந்நிறுவனம், சென்னையில் ராக்கெட் என்ஜின்களை உருவாக்குவதற்காக நாட்டின் முதல் பிரத்தியேக தனியார் தொழிற்சாலையைப் திறந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையை டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் மற்றும் இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான எஸ். சோமநாத் ஆகியோர் திறந்து வைத்தனர். அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3டி பிரின்டிங் வாயிலாக விண்வெளிக்கு பயணிக்கும் ராக்கெட் என்ஜின்களை உருவாக்க உள்ளது. இந்த ராக்கெட் என்ஜின்களை பிற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அளிப்பதுடன் தனது சொந்த ராக்கெட்டுகளையும் ஏவவுள்ளது. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், ‘இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு புதிய ராக்கெட் என்ஜின்களை உருவாக்க முடியும். செயற்கைகோள்களை செலுத்தும் ஏவு வாகனமான ‘அக்னிபான்’ (Agnibaan) ஏவுவதற்குத் தேவையான என்ஜின்களுக்கான உற்பத்தியும் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.