‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீடு திட்டத்தில், எந்த ஒரு காரணத்தாலும் இறந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. ஒரு முறை வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், ஆண்டுதோறும் வங்கி கணக்கில் இருந்து, அதற்கான காப்பீட்டு பிரீமியம் ரூ. 330 தானாக எடுக்கப்படும். காப்பீடு செய்தவர் இறந்த 45 நாட்களுக்குள் குறிப்பிட்ட வங்கி கிளையில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அவரது குடும்பத்தினர் காப்பீட்டு தொகையை பெறலாம். கொரோனா பாதிப்பால் இறந்தவரின் குடும்பத்துக்கும் இந்த காப்பீடு தொகை கிடைக்கும். 18 முதல் 50 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 50 வயதுக்குள் இணைந்தவர்கள் அதனை 55 வயது வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதேபோல, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் 18 முதல் 70 வயதுடையவர்கள் விபத்தில் இறந்தால், இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு தொகையாக குடும்பத்திற்கு வழங்கப்படும்.