பேரூராட்சியில் பிரதமர் புகைப்படம்

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சியின் தலைவியாக இருப்பவர் அஞ்சம்மாள். இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவரது கணவர் மதியழகன் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார். தி.மு.க.விலும் கட்சிப் பதவியில் உள்ளார். இங்கு 7வது வார்டு கவுன்சிலராக இருக்கும் பா.ஜ.கவை சேர்ந்த சந்திரசேகர், பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்களும் அஞ்சம்மாள் கணவர் மதியழகனும் மோடி படத்தை அகற்றுமாறு அஞ்சம்மாளை வற்புறுத்தி, பிரதமர் மோடியின் படத்தை அகற்றினர். இதனை பா.ஜ.க. கவுன்சிலர் சந்திரசேகர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இது பரவியதையடுத்து அங்கு திரண்ட பா.ஜ.க.வினர், மண்டலத் தலைவர் ராஜேந்திரன், கவுன்சிலர் சந்திரசேகர் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த மகாத்மா காந்தி படத்திற்கு அருகிலேயே பாரத பிரதமர் மோடியின் படத்தையும் வைத்தனர். பல இடங்களில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் தலைவர்களின் கணவர்மார்களே ஆக்டிங் தலைவர்களாக வலம் வருவது இந்த சம்பவம் உட்பட பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சித் தலைமையோ அல்லது அரசோ இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.