ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஜி – 7’ மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் விருந்தினர்களாகப் பங்கேற்றன. பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் கோவிட் 2வது அலை ஏற்பட்டபோது உதவிய ஜி7 நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் விநியோக சங்கிலி, எந்தவிதத் தடையுமின்றி தொடர வேண்டும். உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’ என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில், கொரோனாவிற்கு எதிராக அரசு, தொழில்துறை, ராணுவம், பொது மக்கள் என ஒட்டு மொத்த சமூகமும் போராடி கொண்டுள்ளது. இது போன்ற பெருந்தொற்றுகள் வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனா தடுப்பு மருந்திற்கான காப்புரிமையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள வேண்டும்’ என பேசினார். அவரது கருத்துக்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பைத் தெரிவித்தன.