கோழிக்கோடு ரயில்வே காவல்துறையினர், போதிய ஆவணங்கள் இல்லாமல் குழந்தைகளை அழைத்து வந்ததற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். குழந்தைகளை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கல்விக்காக அழைத்துச் செல்லும்போது அவர்கள் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அவர்களுடன் இருந்த 12 சிறுமிகளும் ரயில்வே காவல்துறை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் குழந்தைகள் பரோடாவில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸில் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பதும் கேரள மாநிலம் ஆலுவா புல்லுவாஹியில் உள்ள கிறிஸ்தவ அறக்கட்டளையான கருணாலயாவில் அவர்களை படிக்கவைக்க அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அழைத்துவந்த பெரியவர்களில் 3 பேர் அவர்களின் பெற்றோர், மற்ற இருவரும் தங்கள் உறவினர்கள் என்று அவர்கள் காவல்துறையில் தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்.பி.எப் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த தொண்டு நிறுவனத்தின் உரிமம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அறக்கட்டளையை நடத்திவந்த சுதந்திர பெந்தேகோஸ்தே சர்ச் போதகர் ஜேக்கப் வர்கீஸ் கைது செய்யப்பட்டார்.