போர்ப்ஸ் நிறுவனம் 18வது உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த வருடப் பட்டியலில் ஒவ்வொரு முறையும் நமது பாரதப் பெண்கள் இந்த டாப் 10 பட்டியலில் வருவார்களா என எதிர்பார்க்கும் நிலையில், இந்த ஆண்டு பாரத வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இப்பட்டியலில் 2ம் இடம்பெற்றுள்ளார். டாப் 100 பேர் பட்டியலில் 4 பாரத பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் கமலா ஹாரிசும், 3ம் இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்டும் உள்ளனர். பாரதத்தை சேர்ந்தவர்கள் வரிசையில், இப்பட்டியலில் இந்த ஆண்டு 37வது இடத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், 52வது இடத்தில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோஷ்னி நாடார், 72வது இடத்தில் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 88வது இடத்தில் நைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஃபால்குனி நாயர் ஆகியோர் உள்ளனர்.