சுதந்திரத்தின் 75வது ஆண்டை பாரதம் கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு, அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம் ஆகியவை இணைந்து, 75 லட்சம் அஞ்சல் அட்டைகள் பிரச்சாரத்தை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20, 2021 வரை நடத்துகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகள், மாநில கல்வி வாரிய பள்ளிகளை சேர்ந்த 4 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கு பெறலாம். இந்த பிரச்சாரத்தின் வாயிலாக பாரதம் முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை அஞ்சல் துறையினர் இதற்காக தொடர்பு கொண்டுள்ளனர். சுமார் 7,000 பள்ளிகளின் பங்கேற்புடன் 4.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களின் சிறந்த யோசனைகளைக் கொண்ட 10 அஞ்சல் அட்டைகளை பட்டியலிடும். மேலும் அவை சி.பி.எஸ்.இ இணைதளத்திலும், மைகவ் தளத்திலும் பதிவேற்றப்படும். ஜனவரி 17, 2022 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் சிறந்த யோசனைகளைக் கொண்ட 75 அஞ்சல் அட்டைகள் அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ தலைமையகத்தால் தேர்ந்தெடுக்கப்படும்.