ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்ககாலக் டாக்டர் மோகன் பாகவத், மே 15 அன்று வென்று காட்டுவோம் (பாஸிட்டிவிட்டி அன்லிமிடெட்) என்ற தொடர் சொற்பொழிவு நிறைவு நிகழ்ச்சியில் வழங்கிய கருத்துரையிலிருந்து:
இன்று சூழ்நிலை கடினமாகத்தான் உள்ளது. பல குடும்பங்களில் வாழ்வாதாரத் தூணாக உள்ளவர்கள் தொற்றால் காலமாகிவிட்டார்கள். அந்த குடும்பங்கள் பரிதவிப்பில் உள்ளன. இன்றைய தேதியில் ஆறுதல் தான் கூற இயலும். இன்று மக்களுக்கு எத்தனையோ தேவைகள் அவற்றை அறிந்து கொண்டு ஆர்எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தில் சேவை செய்து வருகிறார்கள். அகால மரணம் என்பது கொடுமையானதுதான் ஆனால் உயிரிழந்தவர்களுக்கு துன்பங்களை தாங்க வேண்டிய கஷ்டம் கிடையாது. அந்த கஷ்டம் நமக்கு உண்டு என்பதால் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
கொரோனா நெகட்டிவ் ஆகவும் நமது மனது பாசிடிவ் ஆகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். கடந்த 4 நாட்களாக வென்று காட்டுவோம் சொற்பொழிவு வரிசையில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தின் ஆதாரத்தில் கருத்துக்களை வழங்கியதைக் கேட்டோம். நானும் அதுபோல அனுபவத்தில் பேரில் சில கருத்துக்களை எனது சொற்களில் தருகிறேன். மனது சரிவர இருந்தால் எல்லாம் சரியாகும். துக்கம் பொங்கி வருவது போல அதற்கு இணையாக நம்பிக்கையும் ஓங்கி வருகிறது என்பதுதான் உண்மை. அதனால்தான் ஸ்வயம்சேவகர்கள் மக்களுக்கு உதவுவதற்கு ஓடோடிச் செல்கிறார்கள். “என் தேவையை விட உன் தேவை பெரிது” என்ற மனப்பான்மைதான் நமது சேவைகளின் பின்னணி.
தினமும் ஊடகத்தில் மரணச் செய்திகள் கேட்டுக் கேட்டு மனது வாடிப் போய்விடுகிறது என்றால் அதில் ஒரு பயனும் இல்லை. அதையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் செயலில் இறங்க துடிப்பு ஏற்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் தனது பள்ளிப் பருவ வயதில் பிளேக் நோய்க்கு தன்னுடைய தாயாரையும் தந்தையையும் இழந்தார். ஆனால் ப்ளேக் நிவாரண பணியில் முழு ஊக்கத்துடன் குதித்தார். தொற்று தன்னையும் பதம் பார்க்கும் என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. அவரது வாழ்வில் அந்த துயரமான கணங்களில் இருந்து விடுபட்டு பின்னாளில் அவர் ஆளுமை அனைவருக்கும் ஊக்கம் தரும் மையமாக உயர்ந்தது. டாக்டர் ஜி என்றால் அன்பு என்ற சூழ்நிலை ஊரில் உருவாயிற்று.
பிறப்பு இறப்பு என்ற சக்கரம் முடிவில்லாதது, இறப்பு என்பது உடையை களைந்து மாற்றுவது போலத்தான். இதெல்லாம் பாரத வாசிகளான நமக்குத்தெரிந்த விஷயம்தான். நமக்கு மரணம் என்றால் பயமில்லை. சவாலை எதிர் கொள்வோம். இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பொறுப்பேற்ற போது அவருடைய மேசையில் “இங்கே தோல்விக்கு இடம் கிடையாது” என்ற வாசகம் இடம்பெற்றது. நடைபெற்ற போரில் வெற்றி காணும்வரை தேசத்தை அவர் வழிநடத்தினார். நாமும் முழு வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பாற்கடல் கடையப்பட்ட போது ரத்தினங்கள் வந்தன, ஆலகால விஷம் வந்தது. ஆனாலும் அமிர்தம் வரும்வரை தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. எடுத்துக்கொண்ட இலக்கை அடையும் வரை திடசித்தம் கொண்டவர்கள் ஓய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஓய்வில்லாமல் முயற்சி செய்ய வேண்டும். பரஸ்பரம் குறை கூறிக் கொள்ள நேரம் இதுவல்ல. அதற்கான நேரம் வரும். இன்று நாம் முழு வெற்றி பெறும் சங்கல்பத்தை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த சொற்பொழிவில் அஸீம் பிரேம்ஜி, கொரோனாவுக்கு எதிரான முயற்சியில் வேகம் தேவை என்று குறிப்பிட்டார். அதை நினைவில் கொள்வோம். நாடு முழுவதும் சேவை நடைபெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தொண்டில் ஈடுபட வேண்டும். இப்போது மூன்றாவது அலைபற்றி மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். முன் தயாரிப்பு செய்து கொள்ள நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது என்பதுதான் உண்மை. வெற்றி பெறும் சங்கல்பத்துடன் முயற்சி செய்கிறோம். அதற்கு பலன் கிடைக்க நேரம் ஆகலாம். ஆனால் நாம் பலனை அடைந்தே தீருவோம்.
மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடும் நாம், நம்மை முதலில் தொற்று தீண்டாமல் காத்துக் கொள்வோம். நம்மை சார்ந்தவர்களையும் இது குறித்து உஷார் படுத்துவோம் இந்த தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பல பெரியவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை நமக்கு பரிந்துரைத்தார்கள். சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலும் மனமும் ஒருங்கே திடப்படுகிறது. ஆயுர்வேதம் பாரதம் உலகிற்கு அளித்துள்ள மருத்துவ முறை. இன்று மிகப் பலர் பல்வேறு சிகிச்சைகளை முன் வைக்கிறார்கள். பழையது எல்லாமே புனிதமானது என்ற மனப்பான்மை இல்லாமல் எதையும் சோதித்து பார்த்து ஏற்றுக் கொள்வோம். வரும் யோசனைகளை செய்துபார்த்து சரிபார்ப்போம். அதுதான் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை.
ஆயுர்வேதம் சிகிச்சையை மட்டும் சொல்வது அல்ல வாழ்க்கை முறையை வரையறுக்கும் அறிவியல். நாம் உணவு விஷயத்திலும் சிகிச்சை விஷயத்திலும் என்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது ஆயுர்வேதம். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே தங்குகிறோம். வீட்டில் சும்மா இருக்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலுள்ள மற்ற எல்லோருடனும் கலந்து உறவாடும் கலந்துரையாடல்கள் நடத்துவோம். அரசு அறிவித்துள்ள முக கவசம், இடைவெளி போன்ற பல்வேறு விஷயங்களில் நம் குடும்பத்தாருக்கு பயிற்சி கொடுப்போம். அதற்கெல்லாம் இந்த ஊரடங்கு வாய்ப்பு தருகிறது. தொற்று ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை பெறாமல் தாமதிப்பது தவறு. பயத்தால் விழுந்தடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவதும் தேவையில்லை. ஆனால் நாம் எப்போதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் பல விஷயங்களை சொல்லி பயிற்சி கொடுத்து உஷார் படுத்த வேண்டும். அதற்காக மக்களுடன் பழக வேண்டும்.
எத்தனையோ விதங்களில் ஸ்வயம்சேவகர்களும் எத்தனையோ தொண்டு அமைப்புகளும் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் எடுத்துக் கூறுவதுடன் அவற்றில் தோள் கொடுக்கவும் பலரை தூண்டவேண்டும். ஊரடங்கு காரணமாக பிழைப்பை இழந்தவர்கள் பற்றி கருத்து செலுத்த வேண்டும். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் இருந்து தொடங்கி அவர்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்காக அவர்களுக்கு பயிற்சி தருவது முதலியவற்றை முயற்சி செய்ய வேண்டும். முக்கியமாக வீட்டில் கோடைக்காலம் என்பதால் மின் சாதனங்களை கொண்டு குளிர்ந்த நீர் தயாரிப்பதை தயாரிப்பதற்கு பதில் மண்பானை வாங்குவோம். அந்த தொழில் செய்யும் குடும்பங்கள் வாழ்வாதார இழப்பிலிருந்து மீள இது உதவும்.
பிள்ளைகளுக்கு முறைசாரா கல்வி அளிப்பதற்கு ஊரடங்கு ஒரு வாய்ப்பு. பள்ளி செல்லாதது அவர்கள் அறிவை சம்பாதித்துக் கொள்ளாததற்குக் காரணம் ஆகிவிட வேண்டாம். பல விஷயங்களில் அவர்களுக்கு அறிவு புகட்டுவோம். “உலகில் எத்தனையோ நாகரிகங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் ஹிந்துஸ்தானத்தில் மட்டும் ஏதோ ஒன்று . அது சிரஞ்சீவியாக இந்த தேசத்தை வாழவைக்கிறது” என்று ஒரு கவிஞர் பாடினார். அது வேறொன்றும் அல்ல, சவாலை எதிர்கொள்கிற வரலாறு உடையவர்கள் நாம். இன்றைய சூழ்நிலை, நம்முடைய மனோதிடத்திற்கு சோதனை வைக்கிறது. சோதனையில் வெல்வோம். வெற்றி பெற்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்றோ, தோல்வி வந்துவிட்டால் அதோ கதிதான் என்றோ முடிவு கட்டுபவர்கள் அல்ல நாம். போர் புரிவோம், ஜெயிப்பதற்காகப் போர் புரிவோம். நிராசைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.