அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு, வரும் ஜூலை 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் அமர்வில், அம்மாநில அரசு தனது மக்கள் தொகைக் கொள்கையையும் வெளியிடும். அதில், தன்னார்வ கருத்தடை உள்ளிட்ட நடவடிக்கைகள், மக்கள்தொகை கொள்கை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று முதல்வர் கூறியுள்ளார். முன்னதாக, முதல்வர் சுமார் 150 முஸ்லீம் அறிஞர்களை சந்தித்து மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் அரசு வேலைகளில் நுழைவதை அசாம் அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது. முந்தைய பா.ஜ.க அரசில் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வளர்ந்து வரும் மக்கள் தொகையின் ஆபத்து குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.