மக்கள் தொகை மசோதா

உத்தரபிரதேச மக்கள் தொகை மசோதா 2021’ஐ அம்மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து கருத்து மக்கள் தெரிவிக்கலாம், ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வரைவு மசோதாவில், ‘இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்று கொண்டவர்களுக்கு, பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும் அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். தேசிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி வழங்கப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க வேண்டும். இந்த மையங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து கருத்தடை மாத்திரை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களை விநியோகம் செய்வதுடன், குடும்பக் கட்டுப்பாடு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் ஒன்றை சேர்க்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது’ என கூறப்பட்டு உள்ளது.