தமிழக அரசு கடந்த ஜனவரியில் வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல பொருட்கள் தரமற்று இருந்தன. புளியில் பல்லி, வெல்லத்தில் சிரிஞ்ச், மண், கலப்படம் என பல குற்றச்சாட்டுகள் வீடியோ ஆதாரங்களுடன் எழுந்தன. இதனால், தி.மு.கவினர் மற்றும் காவல்துறை செய்த கெடுபிடிகளால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது. பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களில் மட்டுமல்ல, பொருட்களை கொள்முதல் செய்ய நடந்த இ டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற தரமற்ற பொருட்கள் வினியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்களை வினியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் அதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோர் இந்த மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.