ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சிந்தனையுள்ள ஒரு அமைப்பு முஸ்லிம் ஜாக்ரன் மஞ். இதன் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி, “நான், நாடு முழுதும் சென்று பா.ஜ.க அரசின் கொள்கை, செயல்பாடுகள், ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து மக்களிடம் பேசி வருகிறேன். ஆர்.எஸ்.எஸ் கொள்கையோடு ஒத்துப் போகாத சிலர், என் செயல்பாடுகளை தடுக்கவும், என்னை முடக்கவும் முயற்சிக்கின்றனர். கடந்த ஜனவரியில், செங்கல்பட்டு அருகே என் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். தொடர்ந்து கொலை மிரட்டல் போன் வருகிறது. இது தொடர்பாக, காவல்துறையில் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழக காவல்துறை ஆகஸ்ட் 22 முதல் எனக்கு பாதுகாப்பு வழங்கினர். அதே போல, பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பலருக்கும் பாதுகாப்பு வழங்கினார்கள். அப்போதே, அவர்களிடம் இந்த பாதுகாப்பு வழங்குவது தற்காலிகமானது என்றால், அது இல்லாமலேயே இருந்து கொள்கிறேன் என்றேன். அவர்கள், ‘இது நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு என கூறினர். ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல் இம்மாதம் 26ல் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றனர். என்னை போலவே, தமிழகம் முழுதும் ஹிந்து அமைப்பு பிரமுகர்கள் பலருக்கும் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் எங்களை அவர்கள் அடையாளம் காட்டியது போல ஆகி விட்டது. உயிர் விஷயத்தில் கூட தமிழக அரசு அரசியல் செய்வது அநாகரிகமாக உள்ளது. என்னுடன் வரும் மெய்காப்பாளர் பாதுகாப்பை விலக்கி கொண்ட தமிழக காவல்துறை, உயிரற்ற எனது வீட்டுக்கு காவல் போட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அது கூட இல்லை என கேள்விப்பட்டேன்” என கூறியுள்ளார்.