அரங்கனின் கோயிலில் அரசியல் நாடகம்

ஜாகிர் உசேன் என்ற பரத நாட்டியக் கலைஞர், ஸ்ரீரங்கம் கோயிலின் உள்பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். கோயில் ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மனால் தாக்கப்பட்டார் என ஓரிரு நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அனுதாபம் தேடிய ஹுசைன், தன்னை ‘விஸ்வாசத்தால்  நான் ஒரு வைஷ்ணவர்’ என்று கூறி அப்பாவி ஹிந்துக்களிடம் அனுதாபம் தேடவும் முயன்றார்.

உடனடியாக இவருக்கு ஆதரவாக தி.மு.கவினர், தி.மு.க கூட்டணியினர், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என ஒரு பெரிய படையே களமிறங்கியது. ஹிந்துக் கோயில்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையே தனது பணியாகக் கொண்ட ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு, “கோயில் விவகாரங்களை மத அடிப்படையில் அணுகக்கூடாது” என்று கூறியுள்ளார்.

ஹிந்து தர்மத்தை வேரோடு பிடுங்கி எறிந்து, சிதம்பரம் நடராஜரையும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில்களையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்த கருணாநிதியின் குடும்பக் கட்சியான தி.மு.க உறுப்பினர்தான் இந்த ஜாகிர் உசேன். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே ராமசாமி சிலை முன் நாத்திகவாதிகளுடன் அமர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.

“குட்டி எல்லாம் மாட்டு மூத்திரம் குடிச்சிட்டு பாவாடை, பாவாடைன்னு கதறி ஓலமிடுமாம். எருமை மட்டும் ஏரோபிளேன் ஏறி போப்பை ரோம் போய் தொழுமாம். என்ன ஜென்மங்கடா நீங்க?” என பாரதப் பிரதமரையும், ஹிந்துக்களையும், அவர்கள் புனிதமாக வணங்கும் பசுவையும் ஒருசேர இழிவுபடுத்தி தனது டுவிட்டரில் பதிவிட்ட ஜாகீர் ஹுசைன் எப்படி ஹிந்து மதத்தையும், வைஷ்ணவத்தையும் பின்பற்ற முடியும்?

இவரது உண்மை முகத்தை வெளிப்படுத்த இதுபோல பல உதாரணங்களை அடுக்க முடியும். அவர் வைஷ்ணவத்தை உண்மையாகவே நம்பினால், அவர் சனாதன தர்மத்திற்கு மாறியிருக்க வேண்டும் அல்லது மதத்தின் எல்லைகளை மதிக்க வேண்டும். இன்றுவரை அவர் தன்னை முஸ்லிமாக மட்டும்தானே முன் நிறுத்துகிறார்?

ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற முஸ்லிம் பெண்ணை ‘துலுக்க நாச்சியார்’ என்றே கொண்டாடுபவர்கள் ஹிந்துக்கள். அரங்கனின் ஏழு மனைவிகளுள் ஒருவராக அவர் வழிபடப்படுகிறார். இவருக்காக அரங்கநாதர் முஸ்லிம்களை போல ‘கைலி’ ஆடையுடன் காட்சியளிக்கும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.

இப்படி காலம் காலமாக ஹிந்துக்கள் அனைவரையும் அரவணைத்து வருபவர்கள்தான். அவர்களுக்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனினும் அனைத்திற்கும் ஒரு எல்லையும் வரைமுறையும் உண்டு. என்னதான் கோயிலை கட்டிய ராஜாவாக இருந்தாலும் அவரால் கருவறைக்குள் செல்ல முடியாது. கோயில்கள் ஒன்றும் பொழுதுபோக்கு சுற்றுலா தலமல்ல. இது ஹிந்துக்களின் பாரம்பரிய பழக்க வழக்கம். அதனை அனைவரும் மதிக்க வேண்டும்.

அப்படி இருக்கையில், “ஹிந்துக்கள் அல்லோதோர் வரக்கூடாது” என்று தெளிவாக அறிவிப்பு உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் இவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். இது சரியான நடவடிக்கைதான்.

பாடகர் கே.ஏ. யேசுதாசுக்கு குருவாயூர் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது. ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கோயில் விதிமுறைகளை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் சபரிமலையில், ஹிந்துக்கள் அல்லாதோரும் தரிசனம் செய்யலாம் என்றே விதிமுறை உள்ளதால், அவர் பலமுறை சென்றிருக்கிறார்.

“மத ரீதியில் கோயில் விஷயங்களை அணுகமுடியாது” என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. ஹிந்து கோயில் விதிமுறைகளை ஹிந்து மத ரீதியில் அல்லாமல் வேறு எந்த ரீதியில் அணுக வேண்டும்? என்பதை விளக்க மறந்துவிட்டார். இதேபோல மாற்றுமத வழிபாட்டுத் தலங்களிலும் தைரியமாக சொல்வார்களா இவர்கள்?

இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது, ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும், கோயில்களை கைப்பற்ற வேண்டும், அதனை வைத்து சம்பாதிக்க வேண்டும், இவற்றை தடுக்க முற்படும் ரங்கராஜன் நரசிம்மன் போன்றோரை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி நாடகமாகவே இது தோன்றுகிறது.

மதிமுகன்