விஷமம் செய்யும் கேரள அரசு

காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் கோயில் ஆகம விதிகளையும் ஹிந்துக்களின் நம்பிக்கையையும் மீறி, சபரிமலை தரிசனத்திற்கு இளம் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை நடைமுறைப்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ளது. இந்நிலையில் சபரிமலையில் காவல்துறைக்கு கேரள அரசு வழங்கியுள்ள ஒரு கையேட்டில், சபரிமலைக்கு வரும் அனைவரையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன், “சபரிமலை தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதனை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேடு உறுதிபடுத்துகிறது. இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இளம் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் கேரளாவில் மீண்டும் கலவரம் வெடிக்கும்” என்று கூறினார்.