குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

அரசு மருத்துவமனைகளில், பி.சி.ஜி, ஹெபடைடிஸ் பி, ஓ.பி.வி, இன்ப்ளூயன்ஸா, ரோட்டா வைரஸ், எம்.ஆர் உள்ளிட்ட தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. ஆனால் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசி போட அவசியமில்லை என்பதால், தேசிய தடுப்பூசி அட்டவணையில் இது இணைக்கப்படாமல் இருந்தது மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசி ஒரு தவணைக்கு ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில், ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இனி இலவசமாக போடப்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதங்கள் என 3 தவணையாக இந்த தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும், 9.35 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள்.