இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) திங்களன்று வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, கொரோனாவுக்கான பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையின் பயன்பாடு கைவிடப்பட்டது. ஆரம்பகால மிதமான கொரோனா நோய் தாக்கம் அறிகுறி தோன்றிய 7 நாட்களுக்குள் இது பயன்படுத்தப்படலாம். 7 நாட்களுக்குப் பிறகு இதனால் பெரிதாக பயன் இல்லை என்பதால் இது கைவிடப்பட்டது. முன்பு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவர், டோசிலிசுமாப் மற்றும் கன்வெலசென்ட் பிளாஸ்மா பயன்படுத்தப்பட்டன. தற்போது ரெம்டெசிவர், டோசிலிசுமாப் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கடந்த மே 14 அன்று, கோவிட்-19 க்கான ஐ.சி.எம்.ஆரின் தேசிய பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது, இதில் பல நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட பிளாஸ்மாவின் நொயெதிர்ப்பு அதிகரிக்கும் திறன், அதன் குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறன் குறித்து வல்லுநர்கள் கவலைகளை எழுப்பியுள்ளபோதும், பிளாஸ்மா நன்கொடையாளர்களின் தேவை ஒருபக்கம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.