பாரதம் திரும்ப திட்டமிடுங்கள்

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வங்கிகள் திவாலாகும் பிரச்சனை தற்போது சற்று குறைந்திருந்தாலும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு, அதனால் ஏற்பட்டுள்ள விலையேற்றம், விலைவாசி உயர்வு, உணவு பணவீக்கம், வர்த்தகம் குறைவு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல காரணிகளால் பொருளாதார மந்தநிலை அச்சம் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த சூழலில், உலகளாவில் 2023ல் பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடிய வாய்ப்புகள் கொண்ட நாடுகள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை உருவாக பூஜ்ஜிய சதவீத வாய்ப்புகள் உள்ள ஒரே நாடாக பாரதம் உள்ளது. அதேவேளையில் 2023ல் பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட 75 சதவீத வாய்ப்பும் அமெரிக்காவுக்கு 65 சதவீதமும் வாய்ப்பும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, நியூசிலாந்துக்கு 70%, கனடா, ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு 60% பிரான்ஸ் 50%, தென் ஆப்பிரிக்காவுக்கு 45%, ஆஸ்திரேலியா 40%, ரஷ்யாவுக்கு 37.5%, ஜப்பான் 35%, தென் கொரியா 30%, மெக்சிகோ 27.5 %, ஸ்பெயின் 25%, சுவிஸ் 20%, பிரேசில் 15%, சீனா 12.5%, சௌதி அரேபியா 5%, இந்தோனேஷியா 2 சதவீத வாய்ப்புகளும் உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) உண்மை ஜி.டி.பி தரவுகள் அடிப்படையில் வெளியிட்டுள்ள உலக வெளியீடு எதிர்பார்ப்புகள் 2023ல் (World Output Projection) பாரதல் இந்தியா 5.9 சதவீத ஜி.டி.பியுடன் உலகின் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக சீனா 5.2%, இந்தோனேஷியா 5%, சௌதி அரேபியா 3.1%, மெக்சிகோ 1.8% என பல நாடுகள் வரிசைபடுத்தப்பட்டு உள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா 1.6% ஜி.டி.பி வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் 0.3 மற்றும் 0.1 என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சி காணும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாரத்த்தின் முன்னணி பங்கு வர்த்தக தளமாக இருக்கும் ஜிரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிகில் காமத் தனது டுவிட்டரில் இந்த இரு தரவுகளின் புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், “அமெரிக்காவில் உள்ள ஃபேன்சி கல்லூரிகளில் பட்டம் பெற்ற, அங்கு பணிபுரியும் எனது பல நண்பர்களுக்கு, ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்க பாரதத்திற்கு நீங்கள் வர திட்டமிட்டால் அடுத்த 10 வருடத்திற்கு பாரதம் சிறந்த வர்த்தக இடமாக இருக்கும் என்பதை அனைத்து குறியீடுகளும் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார். பல காலமாக நமது பாரதத்தின் இளைய தலைமுறையினர் சிறந்த கல்வி, எதிர்காலம், தொழில் வாய்ப்புகள், நிதியுதவி என பல காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சூழலில், தற்போதுள்ள மத்திய அரசின் மிகச் சிறந்த முயற்சிகளால், பாரதம் இளம் தலைமுறையினர் தொழில்முனைவோராக மாறுவதற்கு ஏராளமான வாய்ப்புகளுடன் கூடிய ஒரு ‘ஸ்டார்ட்அப்’ மையமாக உருவாகி வருகிறது. உலகையே நம்மை நோக்கி வரவழைத்துள்ளது என்றால் மிகையல்ல.