தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினர், குடும்ப ஆடிட்டர் உடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் அரசுமுறை பயணம் என தி.மு.கவினர் கூறிக்கொண்டாலும், அதனை மக்களும் எதிர் கட்சிகளும் நம்பவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் இன்னும் விடை தெரியாமல்தான் உள்ளன. இதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனும் சமீபத்தில் பின்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த விவகாரம் அங்கும் அரசியல் பிரச்சனையை எழுப்பியது. கடுமையான நிதி நெருக்கடியில் மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற பயணம் தேவையற்றது, முதல்வரின் மகள் மற்றும் பேரனும் தூதுக்குழுவில் இருந்தனர். அதில் அவர்களுக்கு என்ன வேலை? என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “இதில் முறைகேடுகள் எதுவும் இல்லை. அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை பொழுதுபோக்கு சுற்றுலாப் பயணமாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது. இந்த பயணத்தில், தலைமைச் செயலாளர் வி.பி ஜாய், அமைச்சர்கள், திட்டக் குழும துணைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டார். கேரளாவை உயர்கல்வியின் மையமாக மாற்றவும், மாநிலத்திற்கு அதிக முதலீட்டைக் கொண்டுவரவும் வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளோம். ஐரோப்பா பயணத்தால் கேரளா அபரிமிதமாக ஆதாயமடையும். கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேலை வாய்ப்புகள், வெளிநாட்டினருக்கான ஆதரவு, மலையாளி சமூகத்துடனான தொடர்பு, முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் பலவற்றில் நாங்கள் இலக்கை விட அதிகமாக சாதித்துள்ளோம்” என்று கூறினார். எனினும், குடும்பத்துடன் சென்ற ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றதை மறைக்க பினராயி போராடுகிறார் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.