இந்தியன் ரயில்வே அவ்வப்போது சுற்றுலா விபரங்களை அறிவிக்கும். ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த சுற்றுலா ஏற்பாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அவ்வகையில், சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி ‘ஸ்ரீ ராமாயணா யாத்திரை’ சுற்றுலா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்ரீராமரின் புனித தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதற்கான இந்த சிறப்பு சுற்றுலா 18 நாள்களை கொண்டது. டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் டூரிஸ்ட் ரயில் மூலம் இந்த ஸ்ரீ ராமாயண யாத்திரை ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஷிரிங்வெர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், பத்ராச்சலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்த சுற்றுப் பயணத்துக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் 600 பேர்கள் வரை பங்கு கொள்ளலாம். பயணிகளுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கொண்ட வசதி செய்து தரப்படும். இதற்கான பயண கட்டணம் ரூ. 62,370. எந்த ரயில் நிலையத்திலிருந்து ஏறினாலும் ஒரே கட்டணம் தான். ஒவ்வொரு ராமர் தலத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்க, வழிகாட்டும் நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். 18 நாட்கள் பயணத்தில் தங்கும் இடம், உணவு ஆகியவையும் தரமாக இருக்கும். டெல்லி, அலிகார், துண்ட்லா, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்கள் புறப்படும் இடங்களாக இருக்கும்’ என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.