பாரத விடுதலைப் போராட்ட வீராங்கனை என்பது மட்டுமில்லாமல் பெண் சுதந்திரம், வாக்குரிமை என பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர் பிகாஜி ருஸ்தம் காமா.
பம்பாயில் வளமான பார்சி குடும்பத்தில் பிறந்தார். ஆங்கில கல்வியுடன் பல மொழிகளையும் கற்று நிபுணத்துவம் பெற்றார். தனது நேரத்தை தர்ம காரியங்களிலும் சமூக சேவைகளிலும் செலவிட்டார். 1896-களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம், பிளேக் கொள்ளை நோய் காலத்தில் நிவாரணக் குழுக்களில் இணைந்து பணியாற்றினார். அதனால் காமாவும் பிளேக் நோய்த் தாக்குதலுக்கு ஆளானார். பின்னர் பிழைத்துக் கொண்டார்.
உடல்நிலை மிகவும் பலவீனமானதால் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தேசியவாதி ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா மூலம் தாதாபாய் நவ்ரோஜியை சந்தித்தார். அவரது தனிச் செயலராகவும் பணியாற்றினார். அங்கு பல தேசபக்தர்களுடன் பணியாற்றினார். இதனால் நாடு திரும்ப வேண்டும் என்றால் தேசியவாத நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு இவர் உடன்படவில்லை.
பாரீஸ் சென்றார். அங்கிருந்த தேசியவாதிகளுடன் இணைந்து ‘பாரீஸ் இந்தியன் சொசைட்டி’ என்ற அமைப்பை உருவாக்கினார். வந்தே மாதரம் இதழை வெளியிட்டார். மதன்லால் திங்க்ரா நினைவாகத் தொடங்கப்பட்ட மதன்ஸ் தல்வார் என்ற இதழுக்கு விநியோகஸ்தராக இருந்தார். 1907ல் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில் ‘இந்திய சுதந்திரக் கொடி’ வடிவமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்.
அங்கிருந்தே பாரதத்தில் மனித உரிமைகள், சமத்துவம், சுயாட்சி, பாலியல் சமத்துவம், பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமைகளுக்குப் போராடினார். விநாயக் தாமோதர் சாவர்கர், ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுடன் இணைந்து பாரத சுதந்திரக் கொடி ஒன்றை வடிவமைத்தார். ஆங்கிலேய அரசு காமாவைக் கொல்லத் திட்டம் தீட்டியது. அதை அறிந்து பிரான்சுக்குத் தப்பினார். இவரது பாரீஸ் வீடு புரட்சி வீரர்களுக்குப் புகலிடமானது. 1935ல் உடல்நிலை மோசமானதால் பம்பாய் வந்தார். தனது சொத்துகளை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதிக்கு எழுதி வைத்தார். வாழ்நாள் முழுவதும் பாரத விடுதலைப் போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திய பீகாஜி காமா 1936ல் 74வது வயதில் காலமானார்.