கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளில் 19 முதல் 98 வயதுள்ளவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. 25 இடங்களில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் முடிவுகள் நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது, ஒட்டுமொத்தமாக நோயாளிகளுக்கு 77.8 சதவீதம் பலன் அளிக்கிறது. கொரோனா தொற்று ஒரளவு கொண்ட நோயாளிகளுக்கு 78 சதவீதம் பலனையும், தீவிர பாதிப்புள்ள நோயாளிகளுக்கு 93.4 சதவீதம் பலனையும் தருகிறது. அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு 63 சதவீதம் பலன் தந்துள்ளது. மேலும், இது டெல்டா வைரசுக்கு எதிராக 65 சதவீத செயல்திறன் கொண்டது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் (என்.ஐ.எச்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்திருந்தது.