பி.எப்.ஐ அமைப்பினர் கைது

திவ்யா பாஸ்கர் பத்திரிகையின் அறிக்கையின்படி, 2047ம் ஆண்டுக்குள் பாரதத்தை முஸ்லிம் நாடாக மாற்றுவோம் என கூறிக்கொண்டு பல தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவுக் குழுவைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குஜராத் மாநிலம், வதோதராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குஜராத்தின் வதோதராவில் பி.எப்.ஐ தலைவர்கள் தீவிரமயமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைத்தவிர, மற்றொரு செய்தியில், கேரளாவின் காசர்கோடு, கர்நாடாகவின் தக்ஷின கன்னடா உள்ளிட்ட 8 இடங்களில் இரு தினங்களுக்கு முன் என்.ஐ.ஏ அமைப்பினர், தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல மின்னணு சாதனங்களும் பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கான விபரங்கள் அடங்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். இதையடுத்து பி.எப்.ஐ அமைப்பின் உறுப்பினர்களான முகமது சினான், சர்ப்ராஸ், நவாஸ் இக்பால் கர்நாடகாவின் அப்துல் ரபீக் கேரளாவின் அபித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ‘நாடு முழுவதும் குறிப்பாக கேரளா, கர்நாடகா, பீகார் மாநிலங்களில் பி.எப்.ஐ.யால் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், பி.எப்.ஐ. அமைப்பிற்கு நிதி உதவியளிக்கும் தென் மாநிலங்களில் உள்ள ஹவாலா செயல்பாட்டாளர்களின் பெரிய சங்கிலித் தொடர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வாயிலாக துபாய் அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சட்டவிரோத பண பரிவர்த்தனைகளில் பி.எப்.ஐ. தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள், தங்கள் அமைப்பின் கொள்கைகளை விளம்பரப்படுத்துவதுடன் வன்முறையில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்பாடு செய்யும் செயல்களில் ஈடுபட இந்த நிதியை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.