கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த எஸ்.கே சீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கில், அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் பாலக்காடு மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக்கை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பி.எப்.ஐ செயல்பாட்டாளர்கள் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சித்திக், பி.எப்.ஐ தலைவர் தலைவர் சுபைர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் இளைஞர் பிரிவு, பா.ஜ.க, சி.பி.ஐ.எம் கட்சியின் இளைஞர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களின் மீது தாக்குதல் நடத்த பட்டியலைத் தயாரித்தார் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பி.எப்.ஐ, சித்திக் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு, கோழிக்கோட்டில் முஸ்லிம் அமைப்பினர் நடத்திய பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டதால் வருத்தமடைந்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள அதன் தொண்டர்களைப் பிடிக்க முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியது. சீனிவாசன் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை, பி.எப்.ஐ அமைப்பின் 20 க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மற்றும் அதன் அரசியல் கிளையான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) உடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.