பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கு; 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் பாஜக மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது கடந்த 2018 மார்ச் 7-ம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் ஒரு குண்டு, பாஜக அலுவலகம் அருகே உள்ள டிராவல் ஏஜென்சி பெயர் பலகை மீது விழுந்து வெடித்தது. பின்னர், அடுத்தடுத்து பாஜக அலுவலகம் மீது நோக்கி வீசப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகள், சாலையில் நின்றிருந்த ஆட்டோ அருகே விழுந்து வெடித்து சிதறின.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம் (34), கோபால் (எ) பாலன் (41), கவுதம் (எ) கவட்டய்யன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, 1908-ம் ஆண்டு வெடிபொட்கள் சட்டப் பிரிவு 4 (வெடித்தலை விளைவிக்க முயற்சி செய்தல்), இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) (கூட்டு சதி) ஆகியற்றின்கீழ் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வுநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி டி.சசிரேகா நேற்று தீர்ப்பளித்தார். அதில், கோபால், ஜீவா, கவுதம் ஆகிய மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் க.கார்த்திகேயன் ஆஜரானார்.