கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முஸ்லிம் மாணவிகளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மாணவிகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும். ஏற்கனவே அவர்களுக்கு ஒரு வருடம் வீணாகிவிட்டது. தற்போது அவர்கள் தனியார் கல்லூரி மாணவிகளாக தேர்வெழுதும் போதிலும், தேர்வுகள் அரசு கல்வி நிறுவனங்களில் தான் நடைபெறுகிறது. அதனால் அவர்களை தேர்வில் ஹிஜாபுடன் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்கள் ஏன் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி கேட்டதற்கு பதில் அளித்த அவர், அதற்கு பதிலளித்த அவர்கள் தலையில் ஹிஜாப் அணிந்திருந்தனர் என்றார். பின்னர், இந்த மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தர்.