ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள 38 வயது பெண் ஒருவர், தன்னை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி தன்னை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியதாக அஜ்மல் கான் என்ற கிராம வளர்ச்சி அதிகாரி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சவினா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “அஜ்மல் கான் தன்னை பிணைக் கைதியாக்கி, வலுக்கட்டாயமாக போதைப் பொருளை உட்கொள்ளச் செய்தார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சம்பவத்தை தனது போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவைப் பயன்படுத்தி மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினார். அப்படி செய்யவில்லை என்றால், எனது 8 வயது மகளை கடத்திச் சென்று யாருக்காவது விற்றுவிடுவேன் என்று மிரட்டினார். அதனால் பயந்து போன என்னை கடந்த டிசம்பர் 17ம் தேதி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். என்னையும் என் மகளையும் மதம் மாற்றினார். என் வீட்டில் இருந்த ஹிந்து கடவுள்களின் சிலைகளை, படங்களை வீசியெறிந்தார். அஜ்மல் தான் திருமணமாகாதவர் என்று முதலில் கூறினார். ஆனால் அவருக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் திருமணமானது பின்னர் தெரியவந்தது. ஏப்ரல் 2 அன்று அஜ்மல் தனது முந்தைய மனைவிகளில் ஒருவரிடம் திரும்பிச் சென்றார். இதுகுறித்து கேட்டபோது என்னை கடுமையாகத் தாக்கினார்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஜ்மல், அந்த பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகக் கூறி அவருக்கு எதிராக குறுக்கு புகார் அளித்தார். இதற்கிடையில், பலாத்காரம் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.